அழியவிருக்கும் ஒரு பறவையைக் காக்க (5) சாம்பல் நாரை

 

நாரை இனத்தில் சாம்பல் நாரை என்று ஒரு பறவை.  சாம்பல் நிற முதுகும், மங்கலான வெள்ளை நிற வயிறும், தலையில் இரு புறமும் கருப்பு பட்டையையும், கழுத்தின் முன் புறம் வெள்ளை சிறகுகளில் ஆங்காங்கே கருப்பு சிறகுகளும் கொண்ட சுமார் மூன்றடி உயரமான இந்தப் பறவையை ஏரி குளங்களில் காணலாம்.  கிராமப் புறங்களில் இதனை நாராயணப் பட்சி என்றும் நதியன் என்றும் கூட அழைக்கிறார்கள்.

Text Box:                                                                               (http://en.wikipedia.org/wiki/Image:Greyheron.jpg)

 

‘ஓடு மீன் ஓட உரு மீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு’ என்று தமிழ் இலக்கியத்திலே வருமே அதுபோல் அரை அடி ஒரு அடி ஆழ நீரில் ஆடாமல் அசையாமல் நின்று கொண்டு தண்ணீரையே பார்த்துக் கொண்டு இருக்கும்.  மீன்கள் தங்கள் உயிருக்கு ஆபத்தில்லை என்றெண்ணி அதனருகே வரும்போது திடீரென அவற்றில் ஒன்றைக் கொத்தி விழுங்கும்.

 

ஒரு சமயம் திருச்சியிலிருந்து புதுக்கோட்டை சென்று கொண்டிருந்த போது சாலையில் இருந்து சுமார் அரை கிலோ மீடர் தூரத்தில் இருந்த ஒரு ஏரியில் ஒரு சாம்பல் நாரையைப் பார்த்தேன்.  அடுத்த கணம் ‘டப்’ என்ற சத்தமும் அத்துடன் நாரை நீரில் விழுவதையும் அதை நோக்கி கையில் துப்பாக்கியுடன் ஒருவர் ஓடி அந்த நாரையை நீரிலிருந்து வெளியே எடுப்பதையும் பார்த்தேன்.  காரை விட்டிறங்கி ஒரே மூச்சில் ஓடி அவரை நெருங்கி, “பறவைங்களெக் கொல்றது சட்டப்படி குத்தம்கறது உங்களுக்குத் தெரியாதா?  நீங்க செஞ்சிருக்கிற காரியத்துக்கு ஒங்களெ அரெஸ்ட் பண்ணி ஒங்க மேல கேஸ் போட என்னால முடியும்.  அந்தப் பறவையை கொஞ்சம் நல்லா உத்துக் கவனியுங்க.  அதனோட இறக்கைலெ ஒண்ணெ ஒங்களால பண்ண முடியுமா  என்றேன்.

 

“சார் இந்த தடவெ என்னெ மன்னிச்சுடுங்க சார்.  இனிமெ நான் கொல்ல மாட்டேன் சார்”, என்றார் அவர்.  நானும், “இந்தத் தடவை சும்மா உடறேன்” என்று சொல்லி நகர்ந்தேன்.  அவரை அரெஸ்ட் செய்வதற்கு நான் ஒரு காட்டிலாகா அதிகாரியும் இல்லை.  அவசியம் வந்தால் என்னைக் காப்பாற்றிக் கொள்ள என் கையில் ஆயுதமும் இல்லை.  மனதில் மட்டும் திடம் இருந்தது.  அவர் செய்யும் காரியம் தவறு என்பதை அவருக்கு உணர்த்த வேண்டும் என்பது ஒன்றே என் குறிக்கோளாக இருந்தது.

 

ஒன்று மட்டும் நிச்சயம்.  எனது கார் மறைந்ததும் அவர் அடுத்த பறவை எங்கே கிடைக்கும் என்று தேடப் போயிருப்பார்.

Text Box:  அடுத்தது என் முறையோ ?

(http://en.wikipedia.org/wiki/Image:Grey_Heron_(Ardea_cinerea)-_Immature_at_Bharatpur_I_IMG_5716.jpg)

எண்ணிக்கையில் பெருமளவு குறைந்து வரும் தாவரங்களையும், விலங்கு, பறவைகளையும் காப்பாற்றுவது என்பது மக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்கினால் ஒழிய நடக்கக் கூடிய காரியம் இல்லை.  “Each one teach one”  என்றாரே அருந்தலைவர் அணு விக்ஞானி  அப்துல் கலாம் அவர்கள்.  அது நடக்கும் நாள் என்னாளோ?

                                            நடராஜன் கல்பட்டு

 

 

                                                     தொடரும்